** தியாவின் ஹைக்கூ கவிதைகள் **



 

இன்றைய ஈழம்

நாளை என் வீட்டில்

திருடர்கள் வரலாம்...

என் வீட்டுத் தெருவில்

காவலர்கள் போகிறார்கள்...

 

காதலர் தினம்

கடற்கரை மணலில்

கசங்கிக் கிடக்கிறது

அநாதரவாய் பல

ரோசாக்கள்

 

புல்லாங்குழல்

காற்று நுழைந்து

சில்மிசம்

செய்யும் வரை

ஊமையாகத்தானே

கிடந்தது

புல்லாங்குழல்

 

சுதந்திரம்

அறுபது ஆண்டுகள்

காத்திருக்கிறோம்

அறுவடைக்காக

 

எண்மர் என் காதலர்கள்

1. புத்தகம்

என் உழைப்பில் பாதி

கொடுத்துச் சேர்த்த சொத்து

தாலாட்டுப் பாடித்

தூங்கவைக்கும்

இன்னொரு தாய்...

 

2. மடிக்கணிணி

என் பத்து விரல்களும்

தூக்கி மகிழ்ந்து

விளையாடும்

இன்னொரு குழந்தை

 

3. இணையம்

உலகைச் சுருக்கி

என்

மடிக் கணிணிக்குள்

பூட்டிவிட்ட

விசித்திர விஸ்வரூபம்

 

4. பாதணி

மிதிபட்டுத்

தேய்ந்துபோகும்

வாய்பேசா அநாதை.

 

5. கைப்பேசி

சட்டைப் பையில்

பதுங்கியிருந்து

பணம் பறிக்கும்

இரகசிய கொள்ளைக்காரன்.

 

6. பேனா

என்றுமே என்னை

வழிநடத்தும்

வெள்ளைப்பிரம்பு.

 

 7.கடிகாரம்

நேரமுகாமை கற்றுத்தந்த

நல்லாசான்..

தூக்கத்தைக் கெடுக்க

மணியடிக்கும் வில்லன்.

 

8. கண்ணாடி

என் சுக துக்கம்

மறைக்க மூக்கின்

மேல் பூட்டிய

கருப்பு ஆடை.

 


அனாதை

தோப்போடு

சிதைந்துபோன

பனங்காட்டில்

புதிதாக ஒரு

வடலி...

 

அமாவாசை

சிதறிய

நட்சத்திரங்களுக்குள்

செத்துக் கிடக்கிறது

ஒரு நிலா.

நிலவு

இருண்டு கிடந்த

இரவின் வாழ்வில்

ஒளியேற்ற வருகிறது

ஒரு

பௌர்ணமி நிலவு

 

 9 வீதி

உழைத்துக் கழைத்து

உடல் சோர்ந்து

கிடப்பவன் போல்

நீட்டி நிமிர்ந்து

நெடுந் தூக்கம்

கொண்டு

பூட்டிக் கிடக்கிறது

பெருந்தெரு


முன்செல்ல

 

ஊன்றுகோல்

சொந்த வீட்டை

பார்க்கும் ஆசையில்

முந்தி விழுந்து

முதலில்

ஓடியதால்

மிதிவெடி தந்த

முதற்பரிசு...

 

போரின் அடையாளம்

செல் பட்டு

அழிந்து போன

முன்னைய தோப்பில்

தலை நிமிர்ந்து

நிற்கிறது

ஒரு

மொட்டைப் பனை

 

ஆனையிறவு

மரணப் பெருந் தெருவில்

ஒரு

ஆகாயப் பெருவெளி

தமிழர் தேசத்தின்

தொண்டைக்குழி

 

 

நான் விரும்பும் பெண்கள்

1. அம்மா

எமக்காகத் -தன்

மெய் வருத்தி

உழைத்துக் களைத்துப்போன

உன்னத தெய்வம்.

இன்னும்...

ஓயாது சுழல்கிறாள்

தன்னச்சில்.

 

2. மனைவி

என்னையே உலகமென

நம்பி வந்தவள்

எனக்குள் ஒளிந்திருந்த - ஓர்

எழுத்தாளனை இனங்காட்டிய

என் காதல் தேவதை.

 

3. மகள்

மழலைச் சிரிப்பில் என்னை

மயங்கச் செய்தவள்.

"அப்பா" என்ற

ஒற்றைச் சொல் மந்திரத்தால்

என்னைக் கட்டிப் போட்ட

வித்தைக்காரி.

 

4. அக்கா

அன்னைக்கு நிகரான

இன்னொரு தாய்.

நாவுக்கு ருசியான

உணவுதர இவளுக்கு நிகர்

யாருளரோ இவ்வுலகில்...

 

5. தங்கை

சிறுவயதில் என்

விளையாட்டுப் பொம்மை.

மௌனத்தில் கூட

வார்த்தைகள் உண்டென்ற

மொழியின் இலக்கணம்

கற்றுத் தந்தவள் - அவள்

உரத்துப் பேசி

நான் பார்த்ததில்லை.

 

6. சித்தி

அடிக்கடி நலம் விசாரிக்கும்

தூரத்துச் சொந்தக்காரி .

பாசத்தால் கட்டிப்போட்ட

என் மூன்றாந்தாய்.

 

7. அம்மம்மா

"அந்தக் காலத்தில நாங்கள்"

என்ற வெறுப்பு

வார்த்தையின் சொந்தக்காரி.

அடிக்கடி கோபப்படும்

அதி தீவிர பாசக்காரி.

சூரியகாந்தி

கிழக்கு நோக்கிய

உன் பார்வையின்

அர்த்தம் என்ன

பெண்ணே

உன் உதய சூரியன்

இன்னும்

உதயமாகவில்லையா?


 
Make a Free Website with Yola.