கன்னிமார் கௌரி அம்பாள் ஆலய இரதோற்சவப் பெருவிழா தொடர்பான முழுமையான தகவல்கள் படங்களுடன்!  

கடைக்கண் பார்வையால் உலகாளும் குப்பிளான் வீரமனை கன்னிமார் கௌரி அம்பாள் திருக்கோவில் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் இரதோற்சவம் நேற்று அதாவது 16-04-2011 சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் அபிஷேகம் பூஜைகளுடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 9 மணிக்கு வசந்தமண்டபப் பூஜை இடம்பெற்றது.

அதனை அடுத்து அம்பாள் உள்வீதியிலே ஆடி அசைந்து வருகின்ற அற்புதக் காட்சியினைக் காணக் கூடியதாக இருந்தது. மலர்கள் தூவ மங்கள வாத்தியங்கள் முழங்க வலம் வந்த அம்பிகையை அடியவர்கள் மெய்யுருக வழிபட்ட காட்சி அனைவரையும் மெய் சிலிர்க்க வைப்பதாய் அமைந்திருந்தது.

அதனைத் தொடர்ந்து 10.45 மணியளவிலே அம்பாள் அழகிய தேரிலே ஆரோகணித்தார். தொடர்ந்து திருத்தேர் முன்பாக சேந்தனாரால்  இயற்றப்பட்ட திருப்பல்லாண்டு ஓதப்பட்டது. தொடர்ந்து அடியவர்களால் திருத்தேர் முன்பு குவித்து வைக்கப்பட்டிருந்த தேங்காய்களை உடைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

பகல் 11.15 மணியளவில் ஊர் மக்கள் ஒன்று கூடி வடம் இழுக்க தெருத்தேர் மெல்ல அசைந்து அம்பாள் பவனி வந்த திருக்காட்சி அந்த தேவர்களே மயங்கிடும் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது. நாதஸ்வரம் தவில் முழங்கிட அரோகரா என்ற கோசத்துடன் அடியவர்கள் ஆனந்தக் கூத்தாட அன்னை ஆதிபராசக்தி அடியவர்களுக்கு எழுந்தருளி அருள் பாலித்தாள். 


ஆண்களுக்கு நிகராக பெண்களும் கௌரி அம்பாளின் வடம் தொட்டு இழுப்பது எந்தக் கோவிலிலும் காணாத இன்னொரு சிறப்பம்சம். திருத்தேர் பவனி வந்த போது அடியவர்கள் பலர் கற்பூரச் சட்டி ஏந்தியும், அங்கப் பிரதட்சணம் செய்தும் தங்கள் நேர்த்திக் கடன்களை   நிறைவேற்றியமையையும் காணக்கூடியதாக இருந்தது.

எங்கள் ஊரைச் சேர்ந்த அடியவர் ஒருவர் உடம்பில் செதில்களால் குத்தி பறவைக்காவடி எடுத்த காட்சியும் . பெண் அடியவர் ஒருவரும் தனது அலகில் செதில்களால் குத்தி பால் காவடி எடுத்த காட்சியும் பார்ப்பவர்களின் நெஞ்சங்களிலே பக்தியின் உச்சமாக அமைந்திருந்தது.

தொடர்ந்து அம்பாளின் திருத்தேர் பவனி மதியம் 12 மணியளவில் தனது இருப்பிடத்தை அடைந்தது. தொடர்ந்து தேரடியில் அர்ச்சனைகள் இடம்பெற்று 1.30 மணியளவில் பச்சைப் பட்டுடுத்தி அலங்காரம் செய்து பக்தர்கள் இசையோடு பாடி வர அம்பிகை திருத்தேரிலிருந்து இறங்கும் வைபவமான அவரோகணம் இடம்பெற்றது. 


நேற்றைய தேர்த் திருவிழாவில் கிராம மக்களோடு வெளியூர் மக்கள் பலரும்  கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும். அழித்தல் தொழிலைக் குறிக்கும் தேர்த் திருவிழாவைத் தொடர்ந்து. அருளல் தொழிலைக் குறிக்கும் தீர்த்தோற்சவம் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெறும்.

தேருக்கு முந்தைய நாள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட சப்பறத்தில் அம்பாள் திருவீதியுலா வந்த அழகிய காட்சியினை கீழே காணலாம்.


நாளை பூங்காவனம் இடம்பெறும். ஒவ்வொரு நாளும் பல்வேறு சமயப் பேச்சாளர்களினதும் சமயச் சொற்பொழிவுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


தகவல் - குப்பிளானில் இருந்து ரவி..

முன்செல்ல

 
Make a Free Website with Yola.