என்றும் அழியா அழகிய நினைவுகள்...                  

                   


பகுதி - 01




(கவியாக்கம் :- அச்சுதபாதம் ரவியன் - வீரமனை குப்பிளான்)



ரூபண்ணா
நலம் நலமறிய
கன்னிமார் கோவிலடியில் கதைத்துத் திரிந்த காலம்
களவாடிய தென்னை இளநீர்
கள்ளன் பொலிஸ் விளையாட்டு அணில் பிடிப்பு
கிட்டிப்புள்ளு, கிளித்தட்டு
விக்னா ரியூசன்
சின்னக் கிணத்தடி, பெரிய கிணத்தடி
அன்னமார் கோவிலடி

ஆடு வளர்ப்பு
புல் பிடுங்குதல், பொயிலை பொறுக்குதல்
ஏரம்பு வாத்தி
மணியம் வாத்தி, குணம் வாத்தி, ரத்தி வாத்தி,
கிளாக்கர், பெஞ்சினியர், மனோ
ஓயண்ணா, பப்பர், சுருளியப்பா, ஐயாப்பொடி, சிவத்தண்ணா
அம்மாக்குட்டியாச்சி, விக்கினேஸ்வரி, அன்பரசண்ணா, காங்கேசு, கிளியக்கா
கிளிகொத்தி, குட்டிமணி, தங்கத்துரை
சிவத்தற்றை ரூபன், கப்பூர், தங்கரத்தான், மாஸ்டர், பரமுவிதானை, பரமண்ணை, அருந்தவக்கா, சின்னக்கிளி,
மட்டுவில் மணி, கொட்டில்கார மணி
அப்பன், தேவன், மாயவன், பாஸ்கரன்
எம்.ஜி, சந்திரன், ஏரம்பு
நித்தியண்ணா வீட்டு ரீ.வி, சீலன் வீட்டு ரீ.வி
.................. இதைப் பற்றிக் கொஞ்சம் கதைப்போமா?
புல்லுப் பிடிங்கினாலும் உவன் உயர்தரம் பாஸ்
என்று சொல்லிப் பெருமைப்பட்ட
ஏரம்பு மாஸ்டர் எப்படி?

 மீட் இந்த கோர்ட் என எங்களுக்கு
இங்கிலீசு பழக்கின
புவனக்காவின் ஓயண்ணா அன்றொருநாள் ஆமிக்கட்டுப்பாட்டில்
புவனம் ...... புவனம் என்று தேடியே போனதாம் உயிர் அவருக்கு....
சுருளியப்பா நடைதானே குப்பிளானில பேமசு?
அவர் கதையும் அப்புறம் யாருக்கும் தெரியாமல்
போனதாம்...
அன்றொருநாள் தைலங்கடவை
வைரவர் கோவிலில அதிக நேரம்
பேசினார் என்று 
காஞ்சோண்டி மாலை எடுத்து
கழுத்திலே போட்டு வைத்தோம் பப்பருக்கு
இன்று சில நாட்களுக்கு முன்னர்
இறந்திட்டார் என்றறிந்து
நெஞ்சு படபடக்கிறது......
அன்றொருநாள் செய்ததற்கு இன்று வரை
சொல்லவில்லை மன்னிப்பு அவருக்கு

ஐயாப்பொடி ஆடு, மாடுகளோட தான் இப்போதும்
சிவத்தாண்ணாக்கு மட்டும் சின்ன ஒப்பிரேசனாம்
காங்கேசு கிளியக்கா கனடாவில் செட்டிலாம்

கொழும்பால வந்த ஏரம்பண்ணை - குளிச்சு
உடைமாற்ற புதிதான சாரம் எடுக்க
அழகான சாரம் என்றுசொல்ல
இந்த இளந்தாரி பொடியன் - நீ கட்டு என்று கொடுத்தார்
படு பாத நோய் வந்து அவர் போய் விட்டார்

வேதம் ஓதி வெந்நீர் இட்ட
கிளாக்கர் போன பின்பும் - நாதமாக ஒலிக்கிறது வீரமனை தோறும்
அவர் கூறிய நமச்சிவாய மந்திரம்

சிவமண்ணை வீசிச் சென்ற
முசுப்பாத்தி, பகிடியெல்லாம் - எவரேனும்
எழுதிச் சென்றால்
அதுவன்றோ இயல்பு இலக்கியம்
அவர் மகன் ரூபண்ணா
அம்மா நான் படுக்கப் போறேன்
எழுப்பாதே என்னை என்று
பாய்ச்சலோ பாய்ச்சலாக
பறந்து தான் விமானம் பிடித்து
கனடாவில் இருந்து - குதித்தாரே
குப்பிளானில் - அட அட அந்தக் கதை 
அடிவயிறு நோகச் செய்யும்
                                                                        

                                                                                                                                    தொடரும்...




 

***************************************************************************



என்றும் அழியா அழகிய நினைவுகள்...

   
பகுதி - 02


(கவியாக்கம் :- அச்சுதபாதம் ரவியன் - வீரமனை குப்பிளான்)



ரூபண்ணா

நாடு விட்டு நாடு சென்று 
நசுங்கி தோய்ந்து....
ஊர் நினைவில் உள்ளுக்குள் வாழ்கின்றோம் 
எத்தனையோ மனிதர்களை எங்கெல்லாம் பார்த்துவிட்டோம் 
எங்கள் குப்பிளானின் சனம் போல 
வேறு எங்கும் பார்த்தது இல்லை 

நாட்டுக்கு அரசனாக நம்ம சனம் இருந்தாலும் 
தோட்டத்தில் களையெடுத்து.....
நீர் பாய்ச்சி
பொயிலைக்கு கெட்டெடுப்பார்கள்.... குப்பிளானில் 
சோற்றுக்கு மட்டும் விவசாயம் இல்லை 
சுவாசத்தில் காற்றுக்கும் அதுதான்...

படித்தவர்.... பாமரர்....பணக்காரர் உழைப்பவர் 
ஈரத்தில் தான் எப்போதும் இருந்து கொள்வார்கள் 

படித்தவர் 
சிவமகாலிங்கம் சேர்
பல்கலைக் கழகத்திற்கு எமது இளையர் 
அவரிடம் தான் திறவுகோல் பெற்றுக் கொண்டார்கள் 
குப்பிளானின் முகவரி 
குப்பிளான் இளைஞர்களின் கனவு நாயகன்....

அன்றொரு நாள் 
ஆட்டத்திவசம் - அமர்ந்து 
சாப்பிட்டுக் கொண்டிருந்தான் - அரவிந்தன் 
சிவமாகாலிங்கம் சேருடைய மகன் - அன்று 
சின்னப் பையன் 
இலையிலே இவனுக்குப் பரிமாறிய உணவு 
சிறிது சிதறி - நிலத்தில் கிடந்தது 
அருகிலே வந்தார் சிவமாகாலிங்கம் சேர் 
சின்னதாக ஒருமுறை தான் அமர்ந்திருந்த 
அரவிந்தனைப் பார்த்தார் 
அரவிந்தன் சிதறிய உணவில் சிறு 
பருக்கை கூட இல்லாமல் பொறுக்கி
தன் இலையிலே போட்டான்....
காந்தியம் அவர் உரையில் மட்டும் அல்ல 
அவர் கண்ணிலும் உள்ளது 
குப்பிளான் அவரிடம் கற்றுக் கொண்டது நிறைய 
கல்விக்கு வயதில்லை 
என்று காட்டிக்கொண்டவர்.

உழைப்பாளி 
திருநா அண்ணா 
படித்தது குறைவு தான்.... 
ஆனால் அவர் ஒரு பல்கலைக்கழகம் 
அன்று குப்பிளானில் அரை வயித்து 
கஞ்சி குடித்தவர்கள் பல பேர் 
அவர் இடத்தில் சுருட்டு சுத்தினவர் தான்
ஒன்றும் இல்லை என்பது மூடத்தனம் 
உன் பத்து விரலும் மூலதனம் 
என்று சொல்லிக்கொடுத்தவர்...
நிச்சயமாகப் பல பேருக்கு அள்ளிக் கொடுத்தவர்...
ரூபண்ணா எங்க ஊரு மக்கள் போல 
எங்கேனும் இங்கில்லை 

இரத்தி வாத்தி
கண்டாலே அவரை கலக்கம் வந்துவிடும் 
காய்ச்சலும் அதிகம் வரும் 
அடுத்த பாடம் அவரின்ர என்றால் 
அடிவயிறு கலக்கி விடும் - என்றாலும் அஞ்சாம்
வாய்ப்பாடோ, ஆறாம் வாய்ப்பாடோ அவர் 
தயவால் தான் இன்று வரும் 
அடிக்காமல் வகுப்பு அவர் நடத்தியது இல்லை 
அவர் சைக்கிளில் ஆணி அடிக்காமல் நாமும் 
இருந்தது இல்லை 
காலையில் சைக்கிள் ஓடி வருவர் 
மாலையில் அவர் உருட்டிச் செல்வர் 
"பயம் அறியும் படிப்பு"
அவர் உணர வைத்தார்.

பாமரன் கந்தோண்ணா
சின்னக் கிளியண்ணா சுருட்டுக் கொட்டில் 
எட்டாம் வகுப்பு பையன் 
ஏதோ வயித்து பிழைப்புக்கு வால் சுத்து 
கட்டி வாழப்போனான் 
கந்தோண்ணா அவனை 
கண்ட இடத்தில் அடிப்பாரு...
வால் சுத்து பிழை என்று மண்டையிலை குத்துவாரு
நூல் சுத்துப் பிழை என்று தொடையில நுள்ளுவாரு
காதிலை பிடிப்பாரு கண்டபடி ஏசுவாரு 
ஆள் தப்பினால் போதும் என்று அதோடு நிறுத்தி 
பையன் மேலே படிக்க மீண்டும் போனான்.
கந்தோண்ணாவை கண்ட இடத்தில் கருவி தீர்த்தான்.

உயர்தரம் பாஸ் பண்ணி ஒரு நாள் கந்தோண்ணாவை 
கடை வீதியில் கண்டு 
உனக்கென்ன நான் செய்தேன் உதையும் 
அடியும் எனக்கேன் நீ தந்தாய் என்று கேட்டான்

"அன்று நான் அடிக்காவிட்டால் இன்று நீ - சுருட்டுக்காரன்
சுருட்டு வேலை எல்லாம் நம்மோடு போகட்டும் 
 படித்து நீ பட்டம் பெறுவாய் என்று தான் அடித்து உன்னை 
அனுப்பினேன் என்றார்.....

ரூபண்ணா என் ஊரு மக்களெல்லாம் 
வெள்ளந்தி மனம் கொண்டோர்..... இவர்கள் 
பற்றி உன்னோடு பேசுவது 
என் வாழ்வின் சுகமன்றோ
                                                                                                                                                                                
தொடரும்...

( நான் குப்பிளான் மக்களின் அனைவரைப்பற்றியும் இதில் குறிப்பிடுவேன் சில வேளை ஒருவரைப் பற்றி திரும்ப குறிப்பிட வேண்டும். அதே நேரம் சில பேருடைய பட்டப் பெயரைக் குறிப்பிடுவது குழப்பம் தவிர்க்கவே அன்றி யாரையும் புண்படுத்த அல்ல - அன்புடன் ரவியன் )

("என்றும் அழியா அழகிய நினைவுகள்" என்ற இந்தக் கவிதைத் தொடர் தொடர்பான எமது மக்களின் மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.  உங்களுடைய விமர்சனங்களை  kuppilan@live.com என்ற எமது மின்னஞ்சல் முகவரியூடாக அனுப்பி வைக்கவும். நன்றி. )
 - குப்பிளான் இணையத்தளம் - 

 

 
Make a Free Website with Yola.