குப்பிளானில் மீள் குடியேற்றம் இடம்பெற்ற பகுதியில் புதிதாக முட்கம்பி வேலி அமைக்கும் இராணுவம்! மக்கள் அதிர்ச்சி


போர் முடிவடைந்து விட்டது என்று மஹிந்த அரசால் அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன.

இப்போது நடைபெறும் சம்பவங்கள் எவரிடம் இருந்து எவரைப் பாதுகாக்க இடம்பெறுகின்றது என்பது தெரியாமல் உள்ளது.

யாழ்ப்பாணத்தின் குப்பிழான் – வடக்கில் கண்ணிவெடியகற்றப்பட்டு, மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிரதேசங்களையும் உள்ளடக்கி இராணுவத்தினரால் புதிதாக பாதுகாப்பு வலயத்திற்கான வேலி அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், 22 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட தமது சொந்த இடங்களுக்குச் சென்று வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக மக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

2011ஆம் ஆண்டு ஒக்டோர் மாதமளவில், கண்ணிவெடியகற்றப் பட்டமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டு, மீள்குடியேற்றத்திற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி, காசுக்கான வேலைத்திட்டத்தின் கீழ் தமது வாழ்விடங்களை துப்புரவு செய்து வந்தனர்.

இந்நிலையில் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த போர்க்கால மண் அணை அகற்றல் திடீரென நிறுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கடந்த மாதத்தின் இறுதிப் பகுதியிலிருந்து, மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிக்குட்பட்டுச் செல்லும் மண் அணைக்கூடாக உயர்பாதுகாப்பு வலயத்திற்கான வேலிகளை படையினர் கடந்தமாதத்தின் இறுதிப்பகுதியிலிருந்து அமைத்து வருகின்றனர்.


உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட பகுதியில் 250பரப்பு நிலம் இராணுவத்தினரால் மீண்டும் எடுக்கப்படுகின்றது.

மேற்படி 250 பரப்பு நிலமும் பொதுமக்களின் வீட்டுநிலம் மற்றும் தோட்டம் நிலமுமேயாகும். மேலும் மீண்டும் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்படும் நிலப்பகுதிக்கு முன்னாலுள்ள பகுதியிலும் மக்கள் மீள்குடியேற மறுத்து வருகின்றனர்.

முழுவதும் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் மீண்டும், இராணுவத்தினரின் வேலிகள் மற்றும் இராணுவத்தினரின் நடமாட்டம் அதிகாரித்துள்ள நிலையில், அப்பகுதியில் மீள்குடியேறி வாழ முடியாது என மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் 22வருடங்களின் பின்னர் மீள்குடியேற்றத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும் மீளக்குடியேற முடியாத நிலையில் 200ற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-நன்றி - தமிழ்.சி.என்.என் செய்திப்பிரிவு- 

 
Make a Free Website with Yola.