நியூ குப்பிளான் வாசகர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்...


எம் தேசமெங்கும் அமைதி நிலவச் செய்திடுவாய் தைத்தோழியே!
 
வந்தது பொங்கல் திருநாள்
வழமை போலவே இம்முறையும்
சிந்தைகள் குளிரப் பொங்கி
சிறப்புடனே  தை மகளை
வரவேற்க முடியாத நிலையில்
சொந்தங்களைப் பறி
கொடுத்த சோகத்தில்
எம்முறவுகள்!

யுத்தங்கள் ஒய்ந்து
சத்தங்கள் நின்ற பின்னும்
நிழல் யுத்தம் எம்மண்ணில்
நீண்டு செல்லும்
தொடர் கதையாய்...!

தட்டிக்கொடுக்க ஆளில்லை
என்பதால்
தமிழன் தோளில்
துயர் சுமக்கும் அவலம்
இங்கு...!

விலை வாசி உயர்வால்
நாளும் வெதும்பிடும்
மக்கள் கூட்டம் ஒருபுறம்!
 
புனர்வாழ்வு முகாம்களில்
நாளும் புழுங்கிடும்
ஒரு கூட்டம் மறுபுறம் !

இங்கிதம் துறந்த
இயற்கையின் சீற்றம் கண்டு
ஏங்கித் தவிர்க்கும்  
இதயங்கள் எத்தனையோ...!


இத்தனை துயர்களுக்கு மத்தியில்
எம்மிடையே இன்று
மலர்கின்ற தைப்பாவை நீ
என்ன மாற்றத்தை
எமக்குப் பரிசாக
தரப் போகின்றாய்?

சொல்லு தை  மகளே
நீ சொல்லு ?
துயர் கடலுள் தத்தளிக்கும்
எமக்கு  உற்ற வழி காட்டிட
ஓடோடி நீயும் வந்துவிடு!

இங்குற்ற கொடுமைகள்
யாவும் அகல;
இன மத மொழி
வேறுபாடு யாவும் நீங்கி
ஏற்றம் பெற்று நாமுய்ய;
தீர்வுப் பொதி சுமந்து
வருவாய் தைத் தோழியே!

எம் தேசமெங்கும்
அமைதி நிலை நீ
மேவிடச் செய்வாய்
தைத் தோழியே!

கவியாக்கம்: செல்வநாயகம் ரவிசாந்


முன்செல்ல

 
Make a Free Website with Yola.