உதவும் கரங்களுக்கு ஒரு உதாரணம்... சிறப்புக் கட்டுரை... 

அமரர் சி. இராசதுரை...


வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் வரலாற்றுப் புகழ் மிக்க யாழ் மத்திய கல்லூரி. யாழ் பரியோவான் கல்லூரி கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி (Big Match) என்றால் அகில இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டுத் துறையின் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாக யாழ் நகரின் அழகிய முற்றவெளி, மணிக்கூட்டுக் கோபுரம் ஆகியவற்றினை அருகே கொண்ட யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் வருடந்தோறும் இவ்விரு கல்லூரிகளுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி இடம்பெறும் போது யாழ் நகரமே குதூகலமாகக் காணப்படும் என்பது யாவரும் அறிந்த விடயம். 

அறுபதாம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் ஒரு வருடம் இப்போட்டியில் யாழ் மத்திய கல்லூரியின் விளையாட்டு வீர இளைஞன் ஒருவன் துடுப்பெடுத்தாடி விளையாடிய போது துடுப்பு மட்டையால் ஓங்கி வீசிய அடியில் அடுத்தடுத்து பந்து சுழன்றடித்து மணிக்கூட்டுக் கோபுரத்தின் எல்லையினைத் தாண்டி பறந்த அந்தக் காட்சி! 


ஆறாவது பந்து வீச்சில் அந்த இளைஞன் அவுட் ஆகியும் ரசிகர்களின் கரகோஷம் அடங்கவேயில்லை.. என்பது இக்கல்லூரியின் கிரிக்கெட் வரலாற்றின் ஒரு முக்கிய நிகழ்வு..

சரி இன்னொரு சம்பவம்...

கொழும்பில் இருந்து வந்த அகில இலங்கைக் குழுவுடன் யாழ் மத்திய கல்லூரிக் குழுவினர் கிரிக்கெட் விளையாட்டில் ஒரு முறை மோதினர். அகில இலங்கைக் குழுவுக்குத் தலைமை தாங்கிய அந்த சிங்கள கிரிக்கெட் வீரனை விளையாட்டில் வீழ்த்துவது சாதாரண விடயமல்ல என்பது அப்போதிருந்த இரசிகர்களின் அபிப்பிராயம். இதே இளைஞன் வீசிய சுழல் பந்து அந்த அகில இலங்கைக் குழுவின் தலைவனை ஒரு எறியில் அவுட் ஆக்கியது. என்பது இந்த இளைஞனின் மற்றுமொரு சாதனை. 

அந்தக் காலத்தில் இலங்கைப் பத்திரிகைகளில் இவைகள் யாவும் பரபரப்பான செய்திகள். இப்படி ஏராளமான சாதனைகள்! இதுவும் வரலாற்றில் ஒரு நிகழ்வு. 

சரி இச்சாதனைகளை தமது கல்லூரியின் கிரிக்கெட் விளையாட்டு துறையின் வரலாற்றில் முத்திரை பதித்த அந்த அழகிய, கம்பீரமான உயரமான, வாட்டசாட்டம், நிறைந்த இளைஞன் யார்? 

அது வேறு யாருமல்ல...

நமது கிராமத்தில் யாவருக்கும் அறிமுகமான எம்மவர் அமரர் சி. இராசதுரை அவர்கள்! 

குப்பிளான் கிராமத்தில் நடந்த விளையாட்டுப் போட்டிகள் யாவற்றுக்கும் ஒரு காலத்தில் புத்துணர்ச்சி கொடுத்தவர்களில் முதன்மையானவர். ஊரில் உள்ள பொது இடங்களிலும் வீதியிலும், எந்த இடத்திலும், எந்த சந்தர்ப்பத்திலும், எந்த நேரத்திலும், எந்த நோக்கத்திற்காகவேனும் ஒரு கூட்டம் கூடி நின்றாலும் அந்த இடத்தில் அவரைக் காணலாம். அதே நேரம் கிராமத்தில் அவரைச் சந்திக்க விரும்புபவர்கள் சந்திப்பது வீட்டில் அல்ல.. வீதியில் ஆகும்.. 

அவர் நிற்கும் இடங்களில் எவருக்கும் என்றும் கை "கொடுத்து உதவும் கரம்" என்றால் அதற்கு உதாரணமாக குறிப்பிட வேண்டியவர். முன் பின் தெரியாத அயல் கிராமத்து நண்பர்கள் கூட ஏதாவது பிரச்சினையில் உதவி கேட்டு அணுகினாலும் தன் தனிப்பட்ட நலன்களைத் துறந்து உதவுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். 

இறுதியாக கடந்த இரு தசாப்தங்களாக இலங்கை தலைநகரை அவர் வாழ்விடமாகக் கொண்டிருந்த போது அவரின் தலைநகர் வாழ்வு என்பது அவருக்கல்ல கிராமத்து மக்களுக்கே பல வழிகளிலும் உதவும் கைகொடுப்பாக அமைந்திருந்தது. 

ஏனெனில் அவரால் தாயக மண்ணின் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்தவர்கள் பலர் இன்று அந்நிய மேலைத் தேச நாடுகளில் வசதியாக நிரந்தரமாக வாழ்பவர்கள் ஏராளம். 

இத்தகைய தன்னலம் கருதாது உதவும் கரம் 2006 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் நிரந்தரமாக வரிசையில் போக வேண்டிய இடத்துக்கு போய்ச் சேர்ந்து விட்டது. என்பது போய் சேர்வதற்காக வரிசையில் நிற்கும் அவரைத் தெரிந்த அனைவருக்கும் ஒரு கரம் இழந்த மாதிரியே .. 

இது நிதர்சனமான உண்மை..

இவரின் பிரிவால் துயருறும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்....

வீ. சக்தி  

முன்செல்ல

 
Make a Free Website with Yola.