சோகம் தாங்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் கதறியழ சக்திதரனின் பூதவுடல் குப்பிளான் காடாகடம்பை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது... 28.03.2011

தங்களது மைந்தன் சக்திதரனை இழந்த சோகம் தாங்காது குப்பிளான் கிராமமே இருள்
சூழ்ந்து கடும் சோகத்தில் ஆழ்ந்திருந்தது.
கவிஞராக, மிகச் சிறந்த
பேச்சாளராக, எழுத்தாளராக, தீவிர சமயப் பற்றுக் கொண்ட பல்வேறு பரிமாணங்களைப்
பெற்ற மிகச் சிறந்த ஆளுமையாகக் காணப்பட்ட சக்திதரனின் மரணத்தை ஜீரணிக்க
முடியாத நிலை குப்பிளான் எங்கும் காணப்பட்டது.
கிராமம் எங்கும் தோரணங்கள்,
கறுப்புக் கொடிகள், மதில்கள் தோறும் கண்ணீர் அஞ்சலிச் சுவரொட்டிகளுடன்
எங்கும் ஒரு வித மயான அமைதி..
குப்பிளான் கிராமமே திரண்டு வந்து எம் தவப்
புதல்வனுக்கு தமது இறுதிஅஞ்சலியைச் செலுத்தியது. குடும்பத்தினரைக்
கண்கொண்டு பார்க்கவே முடியவில்லை.
அவர் ஆசிரியராகப் பணியாற்றிய சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் , மாணவர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.

சக்திதரனின்
வீட்டில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்று பின்னர் கண்ணீர் அஞ்சலிக்கூட்டம்
இடம்பெற்றது.
அதில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் அதிபர் பேசுகையில்,
மிகச் சிறந்த ஆசானை தமது பாடசாலை இழந்து விட்டதாகக் கூறினார். அவர் கல்வி
கற்பித்த மாணவர்கள் தங்கள் பாடசாலையில் என்றுமில்லாதவாறு சிறந்த
பெறுபேற்றைப் பெற்றதாகக் கூறினார். பாடசாலையில் இடம்பெறும் சமய
நிகழ்வுகளிளிலும் சரி ஏனைய விழாக்கள் குறிப்பாக பட்டிமன்றம் போன்றவற்றிலும்
சிறப்பாக மாணவர்களை வழிநடாத்தும் பண்பைக் கொண்டவர் என்றும் எப்போதும்
குறித்த நேரத்துக்கு பாடசாலைக்கு வந்துவிடும் அவரது நேரம் தவறாமை தன்னை
வெகுவாக ஈர்த்ததாகவும் குறிப்பிட்டார். (குப்பிளானுக்கும் சாவகச்சேரிக்கும்
இடையிலான தூரம் யாவரும் அறிந்ததே).
அதிபருடைய இரங்கலுரையை அடுத்து பலரும்
இரங்கல் உரையாற்ற முன் வந்தனர். அடுத்து வந்த ஆசிரியர் ஒருவர் உரையாற்ற
வந்தார் ஆனால் அவரால் பேச முடியவில்லை. கண்ணீரையே உரையாகத் தந்து விட்டுப்
போய்விட்டார். இதே நிலை அவரைத் தொடர்ந்து பேச வந்த நிறையப் பேருக்குக்
காணப்பட்டது.
பின்னர் அவர் கற்பித்த தரம் 7 C மாணவர்களின் இரங்கலுரையும்
இறங்கற்பாடலும் இடம்பெற்றன.
குப்பிளான் கிராமமே கண்டிராத அளவுக்கு ஏராளமான
மக்களால் வீடு நிரம்பி வழிந்தது. அங்கு வந்த எல்லோருமே துக்கம் தாங்காமல்
கண்ணீர் விட்டு கதறி அழுத வண்ணமிருந்த்தனர்.
பின்னர் மதியம் 1.40 மணியளவில்
எம்மைந்தனின் பூதவுடல் குப்பிளான் இளைஞர்களால் காடகடம்பை மயானத்துக்கு
கொண்டு செல்லப்பட்டது. அவரது வீட்டிலிருந்து பூதவுடல் கொண்டு சென்ற வழி
நெடுகிலும் தெருவெங்கும் வெள்ளைத்துணி விரிக்கப்பட்டு அதன் மேலேயே
கொண்டு செல்லப்பட்டது.
போகும் வழியெங்கும் இளைஞர்கள் கண்ணீர் விட்டுக்
கதறியழுதது பார்ப்போரின் நெஞ்சை உருகச் செய்தது. மயானத்துக்கு கொண்டு
செல்லப்பட்டு இளைஞர்களின் ஓலத்துக்கு நடுவே எம் மைந்தனின் பூதவுடல் கனத்த
மனதுடன் புதைக்கப்பட்டது.
எப்போதும் சிரித்த அந்த அப்பாவித்தனமான
முகத்தையும் யதார்த்தமான சொல்லாடல்களையும் நாம் இனி எங்கு காண்போம்?
சில கேள்விகளும் விடை தெரியாத வினாக்களும்?
* இன்று ஊடகங்களில் வந்த செய்தியை யாவரும் அறிந்திருப்பீர்கள்...
தோற்கடிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் துப்பாக்கிகளால் சூழப்பட்டு இருக்கும் ஒரு
பிரதேசத்தின் தனி மனிதனின் பாதுக்காப்பும் எதிர்க் கேள்வி கேட்க முடியாத
ஒரு சர்வாதிகாரப் போக்கும் கொண்ட இராணுவ ஆட்சியில் உயிர் வாழ்தலென்பது
கஷ்டமான காரியம் தான்... வேறு எதுவும் பேசாமல் உணவு உட்கொள்ள மட்டும்
வாயைத் திறந்தால் அதிககாலத்துக்கு உயிர் வாழலாம்.
* இன்று ஊர் மக்களோ அல்லது குடும்பத்தினரோ சக்திதரனுக்கு என்ன நடந்தது
என்பது குறித்து பேசுவதற்கு கூட ஒரு வித பய உணர்வு காணப்படுகின்றது...
உண்மைதான் நடந்து கொண்டிருக்கும் மிகச் சிறந்த ஜனநாயக ஆட்சியில் நாளைக்கு அவர்களின் பாதுகாப்பை யார் உறுதிப்படுத்துவது...?
* சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இரு வாரங்களின் பின்னர் யாழ் மாவட்ட பொலிஸ்
பொறுப்பதிகாரி சக பொலிஸார்கள் சகிதம் இன்றைய தினம் சக்திதரனின்
வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளார். இன்று ஊடகங்களில் செய்தி
வெளியாகும் மட்டும் குறிப்பாக இவ்வளவு நாளும் இந்தப் பொலிஸார் உரிய விசாரணை
நடத்தாமல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயற்பட்டது நிதர்சனமாகியுள்ளது.
* இன்றைய தினம் அச்செழு இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் சக்திதரனின்
வீட்டுக்குச் சென்று மலர் வளையம் வைத்து அனுதாபம் தெரிவித்தார்களாம்...
(ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதை ஞாபகத்துக்கு வருகிறது)
* இவரின் விடை தெரியாத அந்த மரணத்தை நீதிமன்றில் கூட முறையிட முடியாத நிலை
காணப்படுகின்றது. இதைத் தான் பாரதி அழகாகச் சொன்னான்... பேய் அரசு ஆட்சி
செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் என்று...
* வேறு எங்கும் நீதி கிடைக்காது... இனி என்ன செய்வது? கடவுள் என்ற ஒருவர்
இருந்தால் அவரிடம் பிரார்த்தியுங்கள்.. எங்கள் அன்பு மைந்தனின் ஆத்மா சாந்தியடைய....
- சாந்தன் -
*************************************************************
நாடு கடந்த தமிழீழ அரசின் ஊடகத் தகவல் அறிக்கை....
ஆசிரியர் சக்திதரனை இராணுவம் படுகொலை செய்ததை ஐ.நா சபை உடனடியாக விசாரிக்க வேண்டும்! நாடு கடந்த தமிழீழ அரசு அவசர கோரிக்கை 29-03-2011
சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆசிரியரான திரு.சம்பந்தன் சக்திதரன் (28 வயது) குரூரமாக கொலை செய்யப்பட்டது பற்றி ஐக்கிய நாடுகள் சபை விசாரிக்க வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசு இன்று கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த விடயம் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,
குப்பிளானை பிறப்பிடமாக கொண்டவரும், சாவகச்சேரி இந்துக்கல்லூரி ஆசிரியருமான திரு.சக்திதரன் சிறிலங்கா இராணுவத்தால் அண்மையில் யாழ்ப்பாணத்தில் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சீருடை தரித்த இரு இராணுவத்தினராலும், சாதாரண உடையில் இருந்த இரு பாதுகாப்பு துறையினராலும் இவர் திருநெல்வேலி சந்திக்கு அண்மையில் அடித்து கொல்லப்பட்டுள்ளார் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
நமக்கு தமிழீழம் கிடைத்தால் நீங்கள் இங்கு இருக்க போவதில்லை”என அவர் கூறியதையடுத்தே மோசமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக கண்கண்ட சாட்சிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
கடுமையாக தாக்கப்பட்ட அவரது உடல் மறுநாள் யாழ்ப்பாண நகருக்கு அண்மையில் வீசப்பட்டு காணப்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் மரணமாகியுள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனப்படுகொலைகள் பற்றிய விசாரணைகளுக்கும், போர்க்குற்றங்களுக்கும், மனிதத்துக்கு எதிரான குற்றங்களுக்குமான அமைச்சர் மொரிஸ் டிலக்ஷன் அவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் சட்டத்துக்கு புறம்பான மரணதண்டனைகளுக்கான விசேட கண்காணிப்பாளர் திரு.கிறிஸ்ரொவ் ஹெயன்ஸ் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த படுகொலை பற்றியும், ஏனைய அண்மைய கொலைகள் பற்றியும் அவசரமான ஒரு விசாரணையை ஆரம்பிக்குமாறு கேட்டுள்ளார்.
தமது வதிவிடத்தில் வாழும் தமிழ் மக்களை அச்சுறுத்தி, அடக்கியாளும் நோக்கிலேயே இந்த செயல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஒரு சுதந்திரமான தமிழீழம் மட்டுமே எமது மக்களின் பாதுகாப்புக்கும், தன்மானத்துக்கும் உத்தரவாதம் அளிக்கமுடியும்.என்று அமைச்சர் மொரிஸ் டிலக்ஷன் குறிப்பிட்டார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர பிரதிநிதி செல்வி சிறிசஜீதா சிவராஜா இந்த விடயத்துக்கு பொறுப்பான ஐக்கிய நாடுகள் சபை அலுவலர்களுடன் தொடர்புகொண்டு இந்த கடிதம் தொடர்பாக அவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி தொடர்ந்து வலியுறுத்தி வருவார்.
அண்மையில் ஜெனிவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் செல்வி சிறிசஜீதா சிவராஜா சிறிலங்காவில் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றி எடுத்துக் கூறியிருந்தார்.
மனித உரிமைகள் பற்றி அக்கறையுள்ள சர்வதேச நிறுவனங்கள் பலவற்றையும் அணுகி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இந்த நிலை பற்றி விளக்கவுள்ளது. திரு.சம்பந்தன் சக்திதரனின் மரணச்சடங்கு அவரது கிராமமான குப்பிளானில் இடம்பெற்றது.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரு.சம்பந்தன் சக்திதரனின் மரணச்சடங்கில் பங்கு பற்றியுள்ளனர்.
சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவர்கள் பெருமளவில் பங்குபற்றி, தமது அன்புக்குரிய ஆசிரியருக்கு சிறப்பான அஞ்சலியை செலுத்தினர்.
பிரதமர் அலுவலகம்,
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.