குப்பிளான் கற்பக விநாயகர் ஆலயம்  பற்றி....

சிறப்புக் கட்டுரைத் தொடர் (பகுதி - 01, பகுதி - 02, பகுதி - 03)


எழுதியவர் - சிவத்தமிழ் வித்தகர்   சிவ. மகாலிங்கம்

காசிவாசி செந்திநாதையர் பிறந்த  ஊர் கலையும் சைவமும் வளர்ந்த மண் இதுவே  சிவபூமியாகிய ஈழமணி திருநாட்டின்  யாழ்ப்பாணக் குடாநாட்டில் செம்மண் வளமுடைய கிராமமாகிய குப்பிளான்பதி இக்கிராமத்து மக்களின் உள்ளங்கவர்ந்த கள்வனாக, ஓங்கார வடிவினனாக இருந்து அருள் பாலிக்கும் அப்பனின் திருத்தலமே கற்பக விநாயகப்பெருமான் ஆலயம்.

கௌரி அம்பாள் சமேதராகிய  கேதீஸ்வரபெருமான் வீற்றிருந்து அருள்புரியும் மாதோட்டத்திலிருந்து நமது முன்னோர்கள் மூன்று விநாயகர் விக்கிரகங்களை கொண்டு வந்து ஒன்றை நீர்வேலி வாய்க்காறறதரவையிலும், மற்றையதை புன்னாலைகட்டுவன் ஆயாக் கடவையிலும், மூன்றாவதை குப்பிளான் கற்கரையிலும் பிரதிஸ்டை செய்ததாக வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன .

அரசடி பிள்ளையார் என்று அழைக்கப்படும் கற்பக விநாயகப்பெருமானின் ஆலயத்தில் நடராஜர், முருகன், நாராயணன், லக்ஷ்மி, வைரவர், நவகிரகங்கள், சண்டேஸ்வரர், திருமுறை செல்வர் கோயில்கள் பரிவாரக் கோயில்களாக உள் வீதியில் அமைக்கப்பட்டுள்ளன.

இராஜகோபுரம், சித்திர  தேர், புதிய அழகான சப்பரம், சபாமண்டபம் என்பவற்றுடன் கூடிய அருள்மிகு ஆலயமாகக் கற்பக விநாயகர் ஆலயம் திகழ்கின்றது. இக் கோயிலிலே அமைந்திருக்கும் விநாயகப்பெருமானின் எழில்மிகு எழுந்தருளி மூர்த்தியின் அருட் கோலத்தைப் பார்த்து வியந்து போற்றியுள்ளனர்.

ஆலயத்தில் நித்திய, நைமித்தியக் கிரியைகள்  சிறப்பாக நடைபெற்று வருகின்றன. நூற்றாண்டு காலத்திற்கு முன்பே  பெருந்திருவுலா என்ற பிரமோற்சவம் ஆரம்பிக்கப் பட்டுவிட்டது. மகோற்சவ விழாவில் ஒவ்வொருநாளும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

சிவ பூசைக்காட்சி, வேதபாராயணம் விழா , திருமுறை விழா, வேணுகான விழா, கோ பூஜை ஆகிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மகோற்சவகாலத்தில் அன்னதானம் வழங்கும் வைபவம் பல அடியார்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. மகேஸ்வர பூசை முறைபடியாகச் செய்த பின்பே நாளாந்தம் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றது.


கற்கரை கற்பக விநாயகர் பெருங்கோவில்! பகுதி 02

மாதம் தோறும் வளரும் வளர்பிறை சதுர்த்தி விழா மிக விமரிசையாக நடைபெறும். விநாயகர் சஷ்டி விரத காலத்தில் இலட்சார்ச்சனை நடைபெற்று இறுதி நாள் 108 கலக அபிசேகம் இடம்பெறும். பின்னர் கயமுகாசூரன் போர் நடைபெறும்.

கந்தசஸ்டி விரதத்தின் இறுதியில் சூரன் போரும் இங்கு மிக சிறப்பாக நடைபெறுகின்றன. திருவெம்பாவைக் காலத்தில் நடராஜ பெருமானுக்கு விசேட பூஜைகள் இடம்பெறும். ஆருத்திரா தரிசனத்தினன்று (திருவாதிரை) அதிகாலை சிதம்பர தரிசனத்தை இங்குள்ள நடராஜர் சந்நிதியிற் காண பக்தர்கள் பெரும் எண்ணிகையில் கூடுவார்கள்.

ஆலயச் சூழலில் அழகான நந்தவனம் அமைகபட்டுள்ளது. இங்கு வெள்ளெருக்கு , கடம்பு , கொன்றை, நெல்லி, பாதிரி, பன்னீர், பலாசு, திருவாத்தி, தர்ப்பை, மந்தாரை ஆகிய இறைவனின் பூஜைக்குப்  பயன்படும் மரங்கள் யாவும் காணப்படுகின்றன.

இராஜமூர்த்தமாக மூலஸ்தானத்தில் எழுந்தருளி இருக்கும் விநாயகப்பெருமானுக்கு நாளாந்தம் அறுகு மாலையும், தலைக்கு வெள்ளெருக்கு மாலையும் சாத்தப்படும். மகோற்சவகாலத்தில் மாத்திரமல்லாது நாளாந்தம் அதிகாலையிலேயே பல பூ மாலைகளையும் நிறைய பூக்களையும் ஆலயத்திற்குக் கொண்டுவந்து அடியார்கள் கொடுத்துவிடுவார்கள்.
 

'' என்கடன்பணி செய்துகிடப்பதே'' என்ற அப்பர்பெருமானின் வாக்கிற்கமைய நமது ஆலயத்திலேயே நடைபெறும் செயற்பாடுகளில் பெரும்பாலானவை தொண்டாகவே செய்யப்பட்டுவருகின்றன. பல போத்தல் பால்தரும் பசுமாட்டினை மகோற்சவ காலத்திற் கோயிற் சூழலில் கொண்டுவந்து கட்டிவிட்டு நாள் தோறும் காலை, மாலை தூய்மையான முறையில் அந்தப் பாலினை கறந்து அபிசேகத்திற்கு கொடுக்கும் தொண்டு இன்றும் நடைபெற்று வருகின்றது.

யாகக் கிரியைகளுக்கு வேண்டிய சமித்துகளை கடையிலேயே பெற்றுக் கொள்ளும் மரபு இங்கு  இல்லை. எல்லா இடமும் தேடி அலைந்து சீரான முறையிற் சமித்துகளை கொண்டு வந்து பக்குவபடுத்தி யாக கிரிகைக்கு கொடுப்பதை இங்கு காணலாம்.

தெய்வத் தமிழாகிய திருமறைக்கு இங்கு முக்கிய இடம் வழங்கப்பட்டு வருகின்றது. திருமுறைச் செல்வர்களுக்குக் கோயில் அமைக்கப்பட்டு மகோற்சவத்தின் ஆறாம் திருவிழா திருமுறை விழாவாகவே பல்லாண்டு காலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. திருமுறை விழாவிற்கு சுவாமி வீதி வலம் வரும் பொழுது திருமுறை ஒலி மட்டுமே வீதியெல்லாம் கேட்கும். அனைவரினது நாவும் தெய்வ  தமிழை பக்தியோடு உச்சரிக்கும்.


கற்கரை கற்பக விநாயகர் பெருங்கோவில்! பகுதி 03

கொடிக்கவி பாடிக் கொடியேற்றுவதும், திருப்பலாண்டு பாடி தேர் இழுப்பதும் இங்கு பல்லாண்டு காலமாக நடைமுறையில் இருந்து வருகின்றது. தமிழிசை ஆகிய பண்ணிசையை யாழ்ப்பாணத்திலேயே அறிமுகப்படுத்திவைத்த பெருமை இசைவல்லார் செல்லத்துரை அவர்களுக்கே உண்டு.

குப்பிளான் கிராமத்திலே பிறந்த இவருக்குக் கற்பக விநாயகனே குலதெய்வம். இவரை குப்பிளான் செல்லத்துரை என்றும் பலரும் அழைப்பார்கள். கற்பக விநாயகர் ஆலயத்திலே இவர் பண்ணிசை வகுப்புக்களை நடாத்திப் பலர் பண்ணோடும் பக்தியோடும் தெய்வத் தமிழ்ப் பாடங்களை பாட வழிகாட்டினார்.

இவரை தொடர்ந்து கட்டுவனை சேர்ந்த ஒதுவார், v . t .v  சுப்பிரமணியம் எங்கள்ஆலயத்தில் 15 ஆண்டுகள் பண்ணிசை வகுப்புக்களை நடாத்திவந்தார். விழா காலங்களில் சுவாமிக்கு பின்னால் திருமுறைப்பாடல்கள் பஜனைப் பாடல்களை பாடும் மரபு  இங்கு தொன்றுதொட்டு நிலவி வருகிறது. இங்கு சமய பிரசங்கம் செய்யும் மரபு பல்லாண்டு காலமாகப் சிறப்பாக நடை பெற்று வருகின்றது.

நெருக்கடியான கால கட்டத்திலும் சமயப் பிரசங்க மரபைப் பேணி நடாத்திய ஒரே ஆலயமாகக் கற்பக விநாயகனின் ஆலயம் மிளிர்கிறது. ஈழத்தின் தலை சிறந்த சைவத் தமிழ் அறியர்கள் அனைவரும் இங்கு உரையாற்றியுள்ளனர். திருமுருக கிருவானந்தவாரியார், தளவாய் சுப்பிரமணிய சுவாமிகள் போன்ற பலரும் இங்கு உரையாற்றி உள்ளனர். 1984  ஆம் ஆண்டில் திருமுறை மாநாடு இரண்டு நாட்கள் இந்த ஆலயத்திலேயே  மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பெரியபுராணம், கந்தபுராணம், திருவாதவூரடிகள்புராணம் ஆகிய மூன்று புராணங்களும் வருடம்தோறும் நியமம் தவறாது இங்கு படிக்கப்பட்டு வரும் சிறப்பினை காணலாம். கந்தசஸ்டி காலத்திற் கந்தபுராணம் சூரபன்மன் வதைத்த படலமும், விநாயகர்சஷ்டி விரத காலத்தில் நாளாந்த பிள்ளையார் கதை படிப்பதும் மரபாகும்.

தொண்டு வேறு; தொழில் வேறு; ஒரு செயலைச் செய்து விட்டுப் பணத்தை எதிர்பார்த்தால் அது தொழில். பலன்  எதுவும்  எதிர் பாராமல் ஈஸ்வர அர்ப்பணமாகக் பணியைச் செய்வதுதான் தொண்டு. எங்கள் ஆலயத்திற்கு வரும் அடியார்கள் தொண்டர்களாகவும், பக்தர்களாகவும் காணப்படுகிறார்கள்  கற்பகன் சந்நிதிதானத்திற்கு பலன் கருதமற் பணி செய்யும் தொண்டர்களை அவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை எங்கள் கிராமத்து அடியார்களிடம் வேரூன்றி உள்ளது.

நம்பினார்க்கு அருள் செய்யும் கற்பகன் தன்னை நாடி வந்து வணங்கும் அடியார்களின் வினைகளை வேரறுத்து இம்மையிலே சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வும், மறுமையில் சிவயான முத்தியும் வழங்குகிறான். அடியார்களே ! பேசும் தெய்வமாக நின்று பேரருள் செய்கின்ற கற்பக விநாயகனின் திருத்தலம் நோக்கி வாருங்கள். அவனுடைய திருவருளுக்குப் பாத்திரமாகுங்கள்.

-முற்றும்-



முன்செல்ல

 
Make a Free Website with Yola.